ஞாயிறு, 11 நவம்பர், 2012

<> கோபம் நீங்கிய இரகசியம்.....!<>


கோபம் நீங்கிய இரகசியம்.....!

ந்த ஊரில் அவன் கடுங் கோபக்காரன். கோபம் வந்துவிட்டால் யார் என்ன என்று பார்க்கமாட்டான். கோபம் தீருமட்டும் அடி, உதை, பாத்திரத்தை வீசி எறிதல் என்று பயங்கர கலாட்டா செய்துவிடுவான். அவன் நல்ல நிலையில் இருக்கும்போது அவனது நண்பர்கள் கோபத்தை குறைத்துகொள்ளச் சொல்வார்கள். 

ஆனால், எவ்வளவோ முயன்றும் அவனுக்கு கோபம் வந்துவிட்டால் அதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.  அவன் அவனாகவே இருப்பதில்லை. கோபம் அடங்கிய பிறகு நாம் ஏன் இப்படிக் கொடூரமாக நடந்துகொள்கிறோம் என்று சிந்திப்பான். அடுத்த முறை கோபப்படக் கூடாது என்று எண்ணிக்கொள்வான்.

ஒரு நாள் அவனது மகன் எதோ தவறு செய்துவிட்டான்.  அவ்வளவுதான், அவனைக் கண் மூடித்தனமாக அடித்து உதைத்தான். இதனால் அவன் மகனின் கை உடைந்து போனது. அறுவைச் சிகிச்சை செய்து குணப்படுத்த வேண்டி வந்துவிட்டது. தன் கட்டுக்கடங்காத கோபத்தை எண்ணி நொந்துகொண்டான்.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு பச்சிலை மூலிகை வைத்தியர் ஒருவர் வந்தார். அவரிடம் சென்று தனது கோபம் குறித்துச் சொல்லி அதைப் போக்க ஆலோசனை கேட்டான்.

அவரும் ஒரு மூலிகைப் பொடி ஒன்றைக் கொடுத்தார். கோபம் வந்தவுடன் இந்தப் பொடியில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். மடமடவென குடிக்கக் கூடாது. நிதானமாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். 

குடித்து முடித்தவுடன் இந்த நூலில் பத்து முடிச்சுப் போடவேண்டும். அதன் பின் அந்த பத்து முடிச்சுகளையும் அவிழ்க்க வேண்டும். அவிழ்த்து முடிக்கும்போது உங்கள் கோபம் பஞ்சாய்ப் பறந்திருக்கும்," என்றார் அந்த வைத்தியர். 

முடிச்சுப் போடவேண்டிய ஒரு அடி நீள மஞ்சள் நிற நூல் ஒன்றையும் கொடுத்தார். வைத்தியருக்கு நன்றி தெரிவித்து மூலிகைப்பொடி, நூலுடன் கிளம்பினான்.

அடுத்த நாளே அவன் மனைவியுடன் ஒரு வாக்குவாதம் துவங்கியது. இவனுக்கோ கோபம் தலைக்கு மேல் ஏறியது.

உடனே வைத்தியர் கொடுத்த பொடியை எடுத்துத் தண்ணீரில் கலக்கிமெள்ளக் குடித்தான்.  குடித்து முடித்ததும் மஞ்சள் நூலை எடுத்து முடுச்சுகளைப் போட்டான். பின் அதை நிதானமாக அவிழ்த்தான். அவிழ்த்து முடித்தபோது அவன் கோபம் காணாமல் போயிருந்தது.

இதேபோல கோபம் வரும்போதெல்லாம் செய்யத் துவங்கினான். கோபம் மறைந்த பின் அந்தப் பிரச்னையைஎளிதாக என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயற்படுத்தினான்.  எதற்கெடுத்தாலும் கோபம் கொள்பவன், இப்போதெல்லாம் கோபமே கொள்வதில்லை.

விலகிப் போனவர்கள் எல்லாம் அவனை நாடி வந்தார்கள். கோபம் விலகியபின் கிடைத்த நன்மைகளை எல்லாம் வரிசைப்படுத்திப் பார்க்கிறான்.

அந்த மூலிகை வைத்தியர் வந்தால் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று இப்போது இவன் தேடிக்கொண்டிருக்கிறான். 

அந்த மூலிகை வைத்தியர், கோபம் தீர‌ என்ன கொடுத்தார்? 

அந்த மூலிகை வைத்தியர், என்னிடம் சொன்ன இரகசியத்தை உங்களிடம் மட்டும் சொல்லவா?  உங்கள் காதைக் காட்டுங்கள்.
இரகசியமாகச் சொல்கிறேன்.

"அந்த மூலிகை வைத்தியர் கொடுத்தது வல்லாரைப் பொடி. கொடுத்த நூல், சாதாரண மஞ்சள் பொடியில் நனைக்கப்பட்ட நூல். கோபம் வந்தவுடன் தண்ணீர் எடுத்துப் பொடியைப் போட்டுக் கரைத்துக் குடிக்கவும், நூலில் முடிச்சுப் போட, அவிழ்க்க‌ எடுத்துக்கொள்ளும் நேரம் அவனின் கோபத்தை
மடை மாற்றிவிடுகிறது. 

சிந்திக்க அவனுக்கு அவகாசம் கிடைக்கிறது. அவனின் ஐம்புலன்களும் அமைதி பெறுகிறது.  அந்தப்பொடியில் கோபம் குறைக்கும் சக்தியும் இல்லை; அந்த நூலிலும் எந்த மாய 
மந்திர சக்தியும் இல்லை. இப்போது புரிகிறதா பொடி, நூல் இரகசியம்?

குறள் தரும் நீதி: - 

உள்ளியது எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

அதாவது ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினைக்காதிருப்பான் ஆனால், நினைத்த‌ நன்மைகளை எல்லாம் ஒருங்கே பெறுவான், என்பதை இந்தக் கதையின் மூலம் அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக