ஞாயிறு, 11 நவம்பர், 2012

<> கோபம் நீங்கிய இரகசியம்.....!<>


கோபம் நீங்கிய இரகசியம்.....!

ந்த ஊரில் அவன் கடுங் கோபக்காரன். கோபம் வந்துவிட்டால் யார் என்ன என்று பார்க்கமாட்டான். கோபம் தீருமட்டும் அடி, உதை, பாத்திரத்தை வீசி எறிதல் என்று பயங்கர கலாட்டா செய்துவிடுவான். அவன் நல்ல நிலையில் இருக்கும்போது அவனது நண்பர்கள் கோபத்தை குறைத்துகொள்ளச் சொல்வார்கள். 

ஆனால், எவ்வளவோ முயன்றும் அவனுக்கு கோபம் வந்துவிட்டால் அதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.  அவன் அவனாகவே இருப்பதில்லை. கோபம் அடங்கிய பிறகு நாம் ஏன் இப்படிக் கொடூரமாக நடந்துகொள்கிறோம் என்று சிந்திப்பான். அடுத்த முறை கோபப்படக் கூடாது என்று எண்ணிக்கொள்வான்.

ஒரு நாள் அவனது மகன் எதோ தவறு செய்துவிட்டான்.  அவ்வளவுதான், அவனைக் கண் மூடித்தனமாக அடித்து உதைத்தான். இதனால் அவன் மகனின் கை உடைந்து போனது. அறுவைச் சிகிச்சை செய்து குணப்படுத்த வேண்டி வந்துவிட்டது. தன் கட்டுக்கடங்காத கோபத்தை எண்ணி நொந்துகொண்டான்.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு பச்சிலை மூலிகை வைத்தியர் ஒருவர் வந்தார். அவரிடம் சென்று தனது கோபம் குறித்துச் சொல்லி அதைப் போக்க ஆலோசனை கேட்டான்.

அவரும் ஒரு மூலிகைப் பொடி ஒன்றைக் கொடுத்தார். கோபம் வந்தவுடன் இந்தப் பொடியில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். மடமடவென குடிக்கக் கூடாது. நிதானமாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். 

குடித்து முடித்தவுடன் இந்த நூலில் பத்து முடிச்சுப் போடவேண்டும். அதன் பின் அந்த பத்து முடிச்சுகளையும் அவிழ்க்க வேண்டும். அவிழ்த்து முடிக்கும்போது உங்கள் கோபம் பஞ்சாய்ப் பறந்திருக்கும்," என்றார் அந்த வைத்தியர். 

முடிச்சுப் போடவேண்டிய ஒரு அடி நீள மஞ்சள் நிற நூல் ஒன்றையும் கொடுத்தார். வைத்தியருக்கு நன்றி தெரிவித்து மூலிகைப்பொடி, நூலுடன் கிளம்பினான்.

அடுத்த நாளே அவன் மனைவியுடன் ஒரு வாக்குவாதம் துவங்கியது. இவனுக்கோ கோபம் தலைக்கு மேல் ஏறியது.

உடனே வைத்தியர் கொடுத்த பொடியை எடுத்துத் தண்ணீரில் கலக்கிமெள்ளக் குடித்தான்.  குடித்து முடித்ததும் மஞ்சள் நூலை எடுத்து முடுச்சுகளைப் போட்டான். பின் அதை நிதானமாக அவிழ்த்தான். அவிழ்த்து முடித்தபோது அவன் கோபம் காணாமல் போயிருந்தது.

இதேபோல கோபம் வரும்போதெல்லாம் செய்யத் துவங்கினான். கோபம் மறைந்த பின் அந்தப் பிரச்னையைஎளிதாக என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயற்படுத்தினான்.  எதற்கெடுத்தாலும் கோபம் கொள்பவன், இப்போதெல்லாம் கோபமே கொள்வதில்லை.

விலகிப் போனவர்கள் எல்லாம் அவனை நாடி வந்தார்கள். கோபம் விலகியபின் கிடைத்த நன்மைகளை எல்லாம் வரிசைப்படுத்திப் பார்க்கிறான்.

அந்த மூலிகை வைத்தியர் வந்தால் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று இப்போது இவன் தேடிக்கொண்டிருக்கிறான். 

அந்த மூலிகை வைத்தியர், கோபம் தீர‌ என்ன கொடுத்தார்? 

அந்த மூலிகை வைத்தியர், என்னிடம் சொன்ன இரகசியத்தை உங்களிடம் மட்டும் சொல்லவா?  உங்கள் காதைக் காட்டுங்கள்.
இரகசியமாகச் சொல்கிறேன்.

"அந்த மூலிகை வைத்தியர் கொடுத்தது வல்லாரைப் பொடி. கொடுத்த நூல், சாதாரண மஞ்சள் பொடியில் நனைக்கப்பட்ட நூல். கோபம் வந்தவுடன் தண்ணீர் எடுத்துப் பொடியைப் போட்டுக் கரைத்துக் குடிக்கவும், நூலில் முடிச்சுப் போட, அவிழ்க்க‌ எடுத்துக்கொள்ளும் நேரம் அவனின் கோபத்தை
மடை மாற்றிவிடுகிறது. 

சிந்திக்க அவனுக்கு அவகாசம் கிடைக்கிறது. அவனின் ஐம்புலன்களும் அமைதி பெறுகிறது.  அந்தப்பொடியில் கோபம் குறைக்கும் சக்தியும் இல்லை; அந்த நூலிலும் எந்த மாய 
மந்திர சக்தியும் இல்லை. இப்போது புரிகிறதா பொடி, நூல் இரகசியம்?

குறள் தரும் நீதி: - 

உள்ளியது எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

அதாவது ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினைக்காதிருப்பான் ஆனால், நினைத்த‌ நன்மைகளை எல்லாம் ஒருங்கே பெறுவான், என்பதை இந்தக் கதையின் மூலம் அறியலாம்.

<>நன்மை செய்வதிலும் தவறு....! <>


நன்மை செய்வதிலும் தவறு....!


டர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று அட்டகாசம் செய்து கொண்டிருந்தது.  அந்தவழியாகப் போவோர் வருவோரை அடித்துச் சாப்பிடுவது அதன் வாடிக்கையாக இருந்தது. காட்டு விலங்குகளே அந்தச் சிங்கம் இருக்கும் திசைப் பக்கம் போவதில்லை.

இந்தச் சிங்கத்தினை எப்படியாவது பிடித்துவிட அருகிலுள்ள கிராமத்தினர் திட்டமிட்டனர்.  சிங்கம் கூண்டில் நுழைந்தவுடன் மூடிக்கொள்ளும் வகையில் கூண்டு ஒன்று தயார் செய்தனர். சிங்கம் நடமாடும் பகுதியில் கொண்டு போய் வைத்தனர். கூண்டுக்குள் ஒரு ஆட்டுக்குட்டியைக் கட்டிவைத்திருந்தனர்.  ஆட்டுக்குட்டி "மே"என்று கத்தும் சத்தம் சிங்கத்தைக் கூண்டுக்குள் வரவைத்து விடும் அல்லவா?
அதனால் தான் இப்படியான ஏற்பாட்டைச் செய்தனர்.

ஆட்டுக்குட்டி பசியால் கத்திக்கொண்டே இருந்தது. இரவு நேரத்தில் ஆட்டுக்குட்டி போடும் சத்தம் கேட்டு சிங்கம் அங்கே வந்தது.  ஆட்டுக்குட்டி இருந்த கூண்டைச் சுற்றிச் சுற்றி வந்தது சிங்கம்.

இன்றைக்குச் சரியான வேட்டை என்று நினைத்தது சிங்கம். ஒரே பாய்ச்சலில் கூண்டுக்குள்
சிங்கம் பாய்ந்தது; சிங்கம் கூண்டுக்குள் பாய்ந்ததும் கூண்டுக் கதவு மூடிக்கொண்டது.  சிங்கம்
அதனைப் பற்றிக் கவலைப் படாமல் தன் இரையை அடித்துச் சாப்பிடுவதில் இருந்தது.

சாப்பிட்டு முடித்ததும் அந்தக் களைப்பில் அப்படியே படுத்து சிங்கம் தூங்கிவிட்டது.
மறுநாள் காலையில் சிங்கம் தான் வசமாகச் சிக்கிக்கொண்டோம் என்பதை உணர்ந்தது.

கிராமத்தினரோ, சிங்கம் பசியால் வாடிச் சாகட்டும் என்று கூண்டிலேயே விட்டுவிட்டனர்
அந்த வழியே வந்த அயலூர் வழிப்போக்கன், சிங்கம் கூண்டில் அடைபட்டிருப்பதைப் பார்த்தான்.

"என்னை இந்தக் கூண்டிலிருந்து வெளியே விட்டுவிடு; உனக்கு புண்ணியமாகப் போகும்.
நான்கு நாட்களாக‌ அடைபட்டுக் கிடக்கிறேன்." என்று சிங்கம் பரிதாபமாக அந்த வழிப்போக்கனிடம் சொன்னது.

"நான் கூண்டைத் திறந்துவிட்டால் நீ என்னை அடித்துச் சாப்பிட்டுவிடுவாயே; நான் மாட்டேன்," என்றான் வழிப்போக்கன்.

அதற்குச் சிங்கம் சொன்னது. "பயப்படாதே. நீ எனக்கு உதவி செய்கிறாய். உன்னை ஒன்றும் செய்ய‌மாட்டேன். என்னை நம்பு," என்றது சிங்கம்.

வழிப்போக்கனும் சிங்கத்தின் மேல் பரிதாபப்பட்டு கூண்டைத் திறந்துவிட்டான்.

நான்கு நாட்களாகப் பசியோடிருந்த சிங்கம், வெளியே வந்ததும் அதன் குணத்தைக் காட்டிவிட்டது.  வழிப்போக்கன்மீது சிங்கம் பாய்ந்தது. வழிப்போக்கன் கொஞ்சம் விலகிக் கொண்டதால் தப்பித்தான்.

"உதவி செய்த என்னையே கொல்லப்பார்க்கிறாயே, இது நியாயமா?" என்று வழிப்போக்கன் கேட்டான்.

"என் பசி எனக்குத் தெரியும். இன்றைக்கு எனக்கு நீ தான் இரை. என் மீது நீ இரக்கம் காட்டுவது உன் இயல்பாக இருக்கலாம்; என் இயல்பான குணம் தெரியாதது உன் தவறு," என்றது சிங்கம்.

சற்று தூரத்தில் இதைக் கவனித்துக் கொண்டிருந்த "புலி" அங்கே வந்தது.

"புலியாரே நீங்களே எனக்கு ஒரு நியாயம் சொல்ல வேண்டும்,"என்றான் வழிப்போக்கன்.
"என்ன நடந்தது என்பதை தெளிவாகச் சொல்லுங்கள் இருவரும்; நான் இருவருக்கும் பாதகமில்லாமல்தீர்ப்புச் சொல்கிறேன்," என்றது புலி.

சிங்கம் நினைத்தது. புலி நம் இனம். எனவே அது நமக்குச் சாதகமான தீர்ப்பைத்தான் சொல்லும் என்று நினைத்தது.

வழிப்போகனோ, புலிக்கும் சிங்கத்துக்கும் ஆகாது; எனவே புலி நமக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பைச் சொல்லும்என நினைத்தான்.

வழிப்போக்கன் புலியிடம் சொன்னான்.

"என்னைக் கூண்டிலிருந்து திறந்து வெளியே விடு; எனக்கு உதவி செய்வதால் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்என்று சொன்னதால்தான் சிங்கத்தை கூண்டிலிருந்து விடுவித்தேன்.  ஆனால் சிங்கம் வெளியே வந்ததும் வாக்குத் தவறி என்னைக் கொன்று சாப்பிடப் பார்க்கிறது. காப்பாற்றிய என்னைச் சிங்கம் கொல்ல நினைப்பது சரியா?" என்று நியாயம் கேட்டான் வழிப்போக்கன்.

இப்போது,சிங்கம் புலியிடம் சொன்னது.
"விலங்குகளையும் மனிதனையும் வேட்டையாடிச் சாப்பிடுவது என் இயற்கையான குணம்.  மனிதனுக்கு பகுத்தறியும் அறிவு இருக்கிறது. என்னைக் காப்பாற்றும் முன் யோசிக்காதது அவன் தவறு. நாலு நாள் பசியோடிருக்கும் எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை; எனக்குத் தேவையான இரையை நான் அடைய நினைத்தது தவறா?" சிங்கம் நியாயம் கேட்டது.

சிங்கத்துக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். எப்படி என்பதை புலி ஒரு நொடி யோசித்தது. அதன் பின் சிங்கத்தைப் பார்த்துச் சொன்னது.
"நடந்ததைத் தெளிவாக இருவரும் சொல்ல வேண்டும். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? சிங்கம் உங்களிடம் சொன்னதை அப்படியே சொல்லுங்கள்," என்ரது புலி.

"நான் இந்த ஒற்றையடிப் பாதையில் அந்தப் பக்கமிருந்து வந்தேன்.  சிங்கம் கூண்டிலிருப்பதைப் பார்த்தேன்.
இந்தக் கூண்டின் முன் வந்து நின்றேன். அப்போது சிங்கம் என்னிடம் உதவி கேட்டது." என்
றான் வழிப்போக்கன்.

"சரி, இவர் கூண்டுக்கு முன்பாக வந்தபோது நீ எங்கிருந்தாய்?" என்று புலி சிங்கத்தைப் பார்த்துக் கேட்டது.

"இவர் வரும்போது நான் கூண்டுக்குள் தான் இருந்தேன்," என்றது சிங்கம்.

"கூண்டுக்குள் எந்த இடத்தில் நீ இருந்தாய்?" என்று புலி சிங்கத்தைக் கேட்டது.

"இதோ இங்குதான் இருந்தேன்," என்று சிங்கம் கூண்டுக்குள் நுழைந்தது.

வழிப்போக்கன் சற்றும் தாமதிக்காமல் கூண்டின் கதவைத் தாளிட்டான்.

"என் இனமாக இருந்தும் நீ துரோகம் செய்துவிட்டாய்"என்று சிங்கம் புலியைப் பார்த்துக் கூறி கர்ஜித்தது.

"யாராக இருந்தாலும் உதவி செய்தவருக்குத் தீங்கு நினைக்கக் கூடாது.  உன்னைக் காப்பாற்றியவரைக் கொன்று தின்ன நினைப்பது சரியில்லை," என்று சிங்கத்திடம் புலி சொன்னது.

"அவரவர்களுடைய இயல்புகளை அறிந்திருந்தும் தவறாக உதவிவிட்டேன்," என்று வழிப்போக்கன்
புலியிடம் சொல்லி தனக்கு உதவியமைக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டான்.

சிங்கம் தன் நிலையை எண்ணி வருந்தியது. காலதாமதமாக உணர்ந்து என்ன செய்வது?


நீதி:- 
இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார்:-

நன்று ஆற்ற லுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக்கடை.

அதாவது, அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால்
நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.